தேசிய செய்திகள்

‘டிஜிட்டல் கைது குற்றவாளிகள் இரக்கமின்றி தண்டிக்கப்பட வேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆவேசம்

வாய்ப்பு கிடைத்தால் டிஜிட்டல் கைது குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பதை நிறுத்தி வைத்து விடுவோம் என நீதிபதி சூரியகாந்த் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

குற்றவாளிகள் மிகவும் இரக்கமற்ற முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூரியகாந்த் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கைது மோசடி

டிஜிட்டல் கைது உள்ளிட்ட இணையவழி குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.களை ஒருங்கிணைப்பது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதி பாக்சி மற்றும் நீதிபதி வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி சூரியகாந்த், டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாக சாடினார். மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களைக் குறிவைக்கும் இதுபோன்ற இரக்கமற்ற குற்றவாளிகளை, சட்டத்தில் ஏதேனும் வாய்ப்பு இருந்தால், விசாரணைக்கு முன்பே தண்டிக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் இது தொடர்பாக நீதிபதி சூரியகாந்த் கூறியதாவது;-

ஆவேச கருத்து

“டிஜிட்டல் கைது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க முடியாதபடி ஏதேனும் வாய்ப்பு இருந்தால், அவ்வாறே நாங்கள் செய்துவிடுவோம். வழக்குகளை ஒருங்கிணைப்பது ஒருபுறம் இருந்தாலும், ஜாமீன் கொடுப்பதையே எங்களால் முடிந்தால் நாங்கள் நிறுத்தி வைப்போம்.

டிஜிட்டல் கைது குற்றவாளிகளை விசாரணைக்கு முன்பே தண்டிப்பதற்கு சட்டத்தில் ஏதேனும் வழி இருந்தால், அதை நாம் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் கைது மோசடி என்பது மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு எதிராக இரக்கமற்ற குற்றவாளிகளால் செய்யப்படும் மோசமான குற்றமாகும்.

இத்தகைய குற்றவாளிகள் மிகவும் இரக்கமற்ற முறையில் தண்டிக்கப்பட வேண்டும். ஒருவரை மிரட்டிப் பணம் பறிப்பது மிகவும் எளிமையானதாக இருக்கலாம். ஆனால் இது டிஜிட்டல் முறையில் கொள்ளையடிப்பது போன்றதாகும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT