தேசிய செய்திகள்

டிஜிட்டல் கைது: மூதாட்டியை மிரட்டி ரூ.38 லட்சம் மோசடி

வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக கீதா தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.38 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார்.

பெங்களூரு,

தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், பெங்களூருவை சேர்ந்த கீதா(வயது 67) என்ற மூதாட்டி, டிஜிட்டல் கைது மோசடி கும்பலிடம் ரூ.38 லட்சம் பணத்தை இழந்துள்ளார். அவருக்கு அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள், தங்களை மும்பை காவல்துறை அதிகாரிகள் என்று கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பயந்து போன மூதாட்டி கீதா, தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார். ஆனால் அந்த நபர்கள், கீதாவை டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும், விசாரணை முடியும் வரை யாரையும் தொடர்பு கொண்டு பேசக் கூடாது என்றும் கூறி மிரட்டியுள்ளனர். பின்னர், இந்த வழக்கில் இருந்து விடுபட வேண்டும் என்றால், வங்கி கணக்கில் உள்ள பணத்தை தங்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், விசாரணை முடிந்ததும் 2 நாட்களில் பணத்தை திருப்பி அனுப்பி விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக கீதா தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.38 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு மோசடிக்காரர்கள் கீதாவை தொடர்பு கொள்ளவில்லை. நாட்கள் கடந்தும் தனக்கு பணம் திருப்பி வராததால் சந்தேகமடைந்த கீதா, இந்த விவகாரம் குறித்து தனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்தபோது, இது ஒரு மோசடி என்பது தெரியவந்ததுள்ளது.

இதனால் அதிர்ந்து போன மூதாட்டி கீதா, உடனடியாக பெங்களூரு சென் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.