தேசிய செய்திகள்

தற்செயலாக சேறு தெறித்ததால் ஏற்பட்ட தகராறு; ஒருவர் குத்திக் கொலை - 5 சிறுவர்கள் கைது

சிறுவர்கள் தங்களிடம் இருந்த கத்தியால் பன்சி லாலை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

புதுடெல்லி,

கடந்த 9-ந்தேதி தலைநகர் டெல்லியில் உள்ள அசோக் விகார் பகுதியில், கேசவ் புரம் என்ற இடத்தில் சேறும், சகதியுமாக காணப்படும் இடத்தின் அருகே ஒரு ஆண் உடலில் படுகாயங்களுடன் சுயநினைவின்றி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த நபரின் உடலில் நெஞ்சு, வயிறு, கை உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த 5 சிறுவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த சிறுவர்களை தேடிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஒரு ஆணை கத்தியால் குத்தியதை ஒப்புக் கொண்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் பெயர் பன்சி லால். இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது தற்செயலாக எதிரே வந்த சிறுவர்கள் மீது சேறு தெறித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த சிறுவர்கள் தங்களிடம் இருந்த கத்தியால் பன்சி லாலை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை சிறுவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 5 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.