தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசு கடந்த மே 13-ந்தேதி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக. கொறடா உத்தரவை மீறி 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இந்த 25 பேருக்கும் எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப் பட்டது.
இந்த 25 பேரில் 4 பேர் ராஜினாமா செய்தனர். 21 பேர் மன்னிப்பு கேட்டு கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதை ஏற்று சபாநாயகர், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.வி.செல்வக்குமார் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கக்கூறி செல்வகுமார் சார்பில் வக்கீல் பி.சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.