புதுச்சேரி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 மதிப்பிலான தீபாவளி சிறப்பு மளிகை பொருட்கள் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், புதுச்சேரி அரசு சார்பில் இந்த சிறப்பு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், 1 கிலோ கடலைப்பருப்பு, 500 கிராம் ரவை, 500 கிராம் மைதா ஆகிய 5 வகையான மளிகை பொருட்கள் இடம்பெறும்.
அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் அட்டைதாரர்களைத் தவிர்த்து, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மற்ற 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகள் மூலம் ரூ.700 மதிப்பிலான இந்த சிறப்பு தொகுப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் தீபாவளி பண்டிகையையொட்டி குடும்பங்களின் மளிகை செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.