பெங்களூரு,
கர்நாடகாவில் 2023ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி நிலவியது. இதையடுத்து, ஆட்சி காலத்தில் முதல் 2½ ஆண்டுகள் சித்தராமையா முதல்-மந்திரியாக இருக்கவும், அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரியாக இருக்கவும் காங்கிரஸ் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதையடுத்து சித்தராமையா முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற நிலையில் அவர் 3 ஆண்டுகள் அந்த பதவியை வகித்தார். இதையடுத்து ஒப்பந்தப்படி தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கக்கோரி காங்கிரஸ் மேலிடத்தில் டி.கே.சிவக்குமார் கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம், ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தியபின் கர்நாடக முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார்.
இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் கடந்த 30ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டசபைக்குழு தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்த டி.கே.சிவக்குமார் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்தார்.
அதன் அடிப்படையில் கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்க டி.கே.சிவக்குமாருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், கர்நாடக முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்றுள்ளார். கவர்னர் தாவர்சந்த் கெலாட் டி.கே.சிவக்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். டி.கே.சிவக்குமாருடன் 14 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சித்தராமையா, கேரள முதல்-மந்திரி சி.டி. சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.