தேசிய செய்திகள்

கர்நாடக முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று மாலை பதவியேற்பு

கர்நாடக மாநிலத்தின் 25வது முதல்-மந்திரியாக கவர்னர் மாளிகையில் இன்று பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்ததும் முதல்-மந்திரி பதவியை சித்தராமையா டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகள் ஆன நிலையில் முதல்-மந்திரி பதவி கேட்டு டி.கே.சிவக்குமார் போர்க்கொடி தூக்கினார்.

சித்தராமையா ராஜினாமா

இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை அழைத்து பேசியது. பின்னர் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தலின் பேரில் சித்தராமையா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் சட்டசபை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய சட்டசபை குழு தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இன்று பதவி ஏற்பு விழா

இதையடுத்து அவர் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார். இதனை கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் ஏற்றுக் கொண்டு டி.கே.சிவக்குமாரை முதல்-மந்திரியாக பதவி ஏற்கவும். புதிய மந்திரிசபை பதவி ஏற்பு விழா நடத்தவும் ஒப்புதல் வழங்கினார். அதன்படி புதிய முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று (புதன்கிழமை) மாலை பெங்களூருவில் பதவி ஏற்கிறார். அவருடன் 14 பேர் மந்திரிகளாக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான விழா இன்று மாலை 4.05 மணிக்கு கவர்னர் மாளிகையில் எளிமையாக நடக்கிறது. இதில் டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இதையொட்டி கவர்னர் மாளிகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கார்கே- ராகுல் காந்தி பங்கேற்பு

இந்த பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

புதிய மந்திரிகள்

இதற்கிடையே புதிய மந்திரிகளின் பெயர்களை இறுதி செய்வதற்காக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர். அங்கு கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோரை நேரில் சந்தித்து யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து 2-வது நாளான நேற்று டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து பேசினர்.

இளம் தலைமுறை எம்.எல்.ஏ.க்கள்

சித்தராமையா தனது பரிந்துரைகள் அடங்கிய பெயர் பட்டியலையும். டி.கே.சிவக்குமார் தான் விரும்பும் மந்திரிகளின் பெயர் பட்டியலையும் வழங்கினர். இருவரின் பெயர் பட்டியலையும் ஆய்வு செய்த ராகுல்காந்தி, முதல்கட்டமாக 14 பேர் மந்திரிகளாக பதவி ஏற்க அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மந்திரிசபையில் 40 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறை எம்.எல்.ஏ.க்களுக்கு 10 இடங்களும், 40 வயதுக்கு மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு 23 இடங்களும் வழங்க காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மந்திரி பட்டியலை இறுதி செய்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் கவர்னர் மாளிகைக்கு டி.கே.சிவக்குமார் அனுப்பி ஒப்புதல் பெறுவார் என்றும், அதன்படி மாலை நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரியாகவும், 14 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.