பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றார். அப்போது அவரிடம் காங்கிரஸ் மேலிடம், 2½ ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியது. இதற்கு சித்தராமையா சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி சித்தராமையா ஆட்சி நிர்வாகம் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு(2025) நவம்பர் மாதத்துடன் சித்தராமையா முதல்-மந்திரி ஆகி 2% ஆண்டுகளை நிறைவு செய்தார். இதையடுத்து டி.கே.சிவக்குமார், கட்சி மேலிடம் தனக்கு அளித்த வாக்குறுதிப்படி தன்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.
இதனால் கர்நாடக அரசியலில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பாத காங்கிரஸ் மேலிடம், தாங்கள் தீர்மானிக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமாருக்கு கட்டளையிட்டது. இதை ஏற்று அவர் அமைதி நிலைக்கு திரும்பினார். அத்துடன் இந்த முதல்-மந்திரி பதவி விவகாரம் முடிவுக்கு வந்தது.
இருப்பினும், பிரார்த்தனைக்கு உரிய பலன் கிடைத்தே தீரும் என்று டி.கே.சிவக்குமார் கூறி வந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுமார் 40 பேர் காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தும் கொடுத்து, முதல்-மந்திரி பதவி விவகாரம் குறித்து விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு பதிலளித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, உரிய நேரத்தில் கட்சி மேலிடம் தீர்மானிக்கும் என்று கூறினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர். இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு கர்நாடக முதல்-மந்திரி பதவி விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் மேலிடம் கூறியது. கடந்த வாரம் கேரளம் முதல்-மந்திரி பதவி ஏற்றார். இதையடுத்து தலைமை மாற்ற பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் முதல்-மந்திரி சித்தராமையாவை டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது.
அதனை ஏற்று சித்தராமையா கடந்த 26-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு அவருடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி, நீங்கள் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சி அதிகாரத்தை டி.கே.சிவக்குமாருக்கு வழங்கி வழிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொள்வதாக சித்தராமையா உறுதியளித்துவிட்டு பெங்களூரு திரும்பினார்.
நேற்று காலை சித்தராமையா மந்திரிகளுக்கு பிரியாவிடை கொடுக்கும் வகையிலான சிற் றுண்டி கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட அனைத்து மந்திரிகளும் கலந்து கொண்டனர். இதில் பேசிய சித்தராமையா, ராகுல்காந்தி உத்தரவுப்படி தான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
அப்போது சித்தராமையா உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அவரை பார்த்து மந்திரிகளும் கண் கலங்கினர். நல்லாட்சி நிர்வாகம் நடத்திய தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய உங்க ளுக்கு நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சித்தராமையா மதியம் 2.30 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு காரில் வந்தார்.
அங்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் இல்லாததால், அவரது செயலாளர் பிரபுசங்கரை சந் தித்த சித்தராமையா, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அப்போது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள் எச்.சி.மகாதேவப்பா, பிரியங்க் கார்கே, லட்சுமி ஹெப் பால்கர், பரமேஸ்வர், வெங்கடேஷ், எம்.பி.பட்டீல், செலுவராயசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர். சொந்த ஊருக்கு சென்ற கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெங்களூரு திரும்பிய பிறகு சித்தராமையாவின் ராஜினாமா கடிதத்தை அங்கீகரிப்பார் என்று கூறப்பட்டது. இதனையடுத்து கர்நாடக முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய சித்தராமையாவின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக கவர்னர் மாளிகை அறிவித்தது. இந்தநிலையில், ஜூன் 1-ம் தேதி கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
டி.கே. சிவக்குமார் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
அமைச்சரவை மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் வெள்ளிக்கிழமை டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரைச் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.