ஸ்ரீநகர்,
மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினின் கட்சியான தி.மு.க. வெற்றி பெறும், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் கட்சி வெற்றி பெறும், கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இது கடவுளின் ஆசீர்வாதம்” என்று தெரிவித்தார்.
மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் மோதல் குறித்து பேசிய அவர், “மத்திய கிழக்கில் அமைதி திரும்பாவிட்டால், இவ்வுலகிற்கு பெரும் துயரங்கள் ஏற்படும். மேலும் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு தலைவரும் இந்த போர் உடனடியாக முடிவுக்கு வருவதை உறுதிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
அமெரிக்காவை போரை நோக்கி தள்ளிய இஸ்ரேலின் செயல் சரியானது அல்ல என்பதை அதிபர் டிரம்ப் உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன். அவர் விரைவாக செயல்படுவார் என்றும், சீனாவும் ரஷ்யாவும் இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வருவதை உறுதி செய்யும் என்றும் நான் கடவுளிடம் வேண்டுகிறேன்” என்றார்.