புதுடெல்லி,
டெல்லியில் சந்தைப்படுத்துதல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு துறை இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டத்தில் பேசியதாவது:- நாட்டில் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் வினியோகம் சீராக உள்ளது. பெட்ரோல், டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது. எல்.பி.ஜி.யைப் பொறுத்தவரை, இது எங்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாகவே உள்ளது. இருப்பினும், இந்த சூழ்நிலையிலும் எங்களது 25 ஆயிரம் வினியோகஸ்தர்களிடம் எங்கும் இல்லாத நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.
எனவே எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். கியாஸ் சிலிண்டர்களை பீதியுடன் முன்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாது.பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்திருக்கிறது. எங்களது அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் தற்போது 100 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட திறனில் இயங்கி வருகின்றன. சுத்திகரிப்பு நிலையங்கள் போதுமான அளவு கச்சா எண்ணெயை வைத்திருக்கின்றன. மேலும், வினியோகம் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு குழாய் வழி இயற்கை எரிவாயு மற்றும் சி.என்.ஜி. தடையின்றி வழங்கப்படுகிறது. எல்.பி.ஜி.யை நம்பியுள்ள நகர்ப்புற மையங்களில் வணிக நுகர்வோர் எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்க, அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி வீட்டு நுகர்வோருக்கே அதிகமாக வழங்கப்படுகிறது. வீட்டு உபயோகம் அல்லாத பயன்பாடுகளில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.