தேசிய செய்திகள்

காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறனுமா? ராகுல் காந்தியை கலாய்த்த மத்திய மந்திரி

பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கிரண் ரிஜிஜு இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைப் பெற வேண்டுமானால், ராகுல் காந்தி 7 விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ராகுல் காந்திக்கு 7 அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவை வருமாறு:

*இந்தியாவில் அதிக நேரம் செலவிட வேண்டும். அடிக்கடி ரகசியமாக வெளிநாடுகளுக்கு விடுமுறைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

*மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். அவர்களின் அனுபவங்களில் இருந்து மதிப்புமிக்க அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

*இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்களின் செயல்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதையும் நிறுத்த வேண்டும்.

*பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிரதமர் மோடி மீதான கடுமையான வெறுப்பைக் கைவிட வேண்டும். பா.ஜ.க.வை அரசியல் எதிரியாகப் பார்க்க வேண்டுமே தவிர, எதிரியாகக் கருதக்கூடாது.

*நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எம்.பி.க்கள் விவாதங்களிலும், கலந்துரையாடல்களிலும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

*இந்திய அரசியலமைப்புக்கு மதிப்பளிப்பதுடன், அரசியலமைப்பு அமைப்புகளையும் கவுரவிக்க வேண்டும்.

*காங்கிரஸ் கட்சி ஜனநாயக முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.

தொடரும் மோதல்

பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கிரண் ரிஜிஜு இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாகவும் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, பிரதமர் மோடியுடன் வெளிப்படையான விவாதம் நடத்தத் தயார் என்றும், அந்த விவாதத்தில் 5 நிமிடங்களிலேயே தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பேன் என்றும் ராகுல் காந்தி சவால் விடுத்திருந்தார். இதனால் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே வார்த்தை யுத்தம் அதிகரித்துள்ளது.2

SCROLL FOR NEXT