பலாமு
மனித சிசுவை வாயில் கவ்வி சுற்றித் திரிந்த நாயால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் அருகே உத்தம் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை வளாகத்தின் முன்பு கடந்த 27-ந்தேதி நாய் ஒன்று 8 மாத சிசுவை தனது வாயில் கவ்வி சென்றுள்ளது. இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து வீடியோ பதிவு செய்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துள்ளனர். பின்னர், இதனை பார்த்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், உத்தம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு 16 வயது சிறுமி ஒருவர் கருக்கலைப்பு செய்து கொண்டார். கிட்டத்தட்ட 8 மாத சிசுவை கருக்கலைப்பு செய்து, மருத்துவமனை வளாகத்தில் தூக்கி வீசப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர், கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட்ட உத்தம் மருத்துவமனை மற்றும் அல்ட்ராசவுண்ட் மையத்துக்கும் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருக்கலைப்பு செய்து சிசுவை மருத்துவமனை வளாகத்தில் வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.