போபால்,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால், நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. தேர்வு நடைபெறுவதற்கு சில நாட்களுக்குமுன்பே ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. இதையடுத்து கடந்த 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. மேலும், நீட் மறுதேர்வு வரும் 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் மவுகஞ்ச் மாவட்டம் மஹன்யா கிராமத்தை சேர்ந்த மாணவி அஹன்ஷா (வயது 18). இவர் மும்பையில் தங்கி இருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அவர் கடந்த மாதம் 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு எழுதி இருந்தார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துவிடலாம் என்று அஹன்ஷா கருதினார். ஆனால், தேர்வுத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
நீட் மறுதேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் மறுதேர்வு எவ்வாறு இருக்கும் என்ற அச்ச உணர்வில் அஹன்ஷா இருந்தார். அவர் கடந்த சில நாட்களுக்குமுன் மும்பையில் உள்ள தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்குமுன் அஹன்ஷா கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் நீட் மறுதேர்வு எழுத அச்சமாக உள்ளது. மறுதேர்வை எழுத தைரியம் இல்லை. அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு பயிற்சிக்காக அஹன்ஷாவின் பெற்றோர் விவசாய கடன் அட்டை மூலம் ரூ. 3 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். மேலும், உறவினர்களிடமிருந்தும் கடன் வாங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.