தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமை... திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவியை விஷ ஊசி செலுத்தி கொன்ற கணவன்

போலீஸ் விசாரணையின்போது மனைவியின் உடலில் விஷ ஊசி செலுத்தி அவரை கொலை செய்ததாக அருண் குமார் ஒப்புக்கொண்டார்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள முதியோர் நல்வாழ்வு மையத்தில் அருண் சர்மா என்பவர் கதிரியக்க நிபுணராக(ரேடியாலஜிஸ்ட்) பணியாற்றி வந்தார். அதே மையத்தில் செவிலியர் காஜல் என்பவரும் பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து அருண் சர்மாவும், காஜலும் தங்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்திற்குப் பிறகு காஜலுடன் அருண் சர்மா அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். குறிப்பாக பணம் மற்றும் வரதட்சணை கேட்டு அருண் சர்மா தனது மனைவி காஜலை துன்புறுத்தியதாகவும், அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், ஹோலி பண்டிகைக்காக இந்த தம்பதியினர் சமீபத்தில் காஜலின் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 17-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அருண் சர்மா மற்றும் காஜல் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காஜலின் பெற்றோர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது காஜல், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பேச்சு மூச்சின்றி தரையில் விழுந்து கிடந்தார். மேலும், வீட்டின் கழிவறையில் ஒரு ஊசி கண்டெடுக்கப்பட்டது. காஜலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை சோதித்த டாக்டர்கள், காஜல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் காஜலின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், அருண் சர்மாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தியபோது, தனது மனைவியின் உடலில் விஷ ஊசி செலுத்தி அவரை கொலை செய்ததாக அருண் குமார் ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அருண் சர்மாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.