தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; ஆண்கள் 7.38 கோடி, பெண்கள் 6.20 கோடி

ஜனவரி 4-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறினார்.

லக்னோ

உத்தரபிரதேசத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 13.58 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

உத்தரபிரதேச மாநிலத்தில் 2027-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று சிறப்பு சுருக்க திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா கூறும்போது, வரைவு வாக்காளர் பட்டியலின்படி உத்தரபிரதேசத்தில் மொத்தம் 13 கோடியே 58 லட்சத்து 68 ஆயிரத்து 905 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 7 கோடியே 38 லட்சத்து 58 ஆயிரத்து 510 பேரும், பெண் வாக்காளர்கள் 6 கோடியே 20 லட்சத்து 6 ஆயிரத்து 353 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 4 ஆயிரத்து 42 பேரும் அடங்குவர். குறிப்பாக, 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 11 லட்சத்து 83 ஆயிரத்து 352 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, தற்போது புதிதாக 18 லட்சத்து 84 ஆயிரத்து 113 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 96 ஆயிரத்து 828 பேரும், ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 87 ஆயிரத்து 449 பேரும் புதிதாக சேர்ந்துள்ளனர். ஜனவரி 4-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறினார்.

விடுபட்ட வாக்காளர்கள்

2020-ம் ஆண்டு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மக்கள் தொகை ஆணையம் வெளியிட்ட கணிப்பின்படி, உத்தரபிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 16.16 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 13.58 கோடி பேர் மட்டுமே உள்ளனர்.

இதன் மூலம் சுமார் 2.58 கோடி தகுதியான நபர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இணையாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் என தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாம்கள்

அதனுடன், தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களுடைய பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்காக விண்ணப்பிக்க இயலும். இதற்காக, 1 லட்சத்து 73 ஆயிரத்து 730 வாக்கு மையங்களில் நவம்பர் 21, 22, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

பொதுமக்கள் தங்களுடைய பெயர்களை இந்த முகாம்களை பயன்படுத்தி சரிபார்த்து கொள்ளலாம் என்றும் ரின்வா கூறியுள்ளார். இதற்காக வண்ண புகைப்படம், தேவையான ஆவணங்களை உடன் கொண்டு வரும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT