லடாக்,
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) சார்பில் இந்திய ராணுவப் பயன்பாட்டிற்காக முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிநவீன பாராசூட்டின் நேரடி சோதனை லடாக்கில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட புதிய நவீன பாராசூட் ஒன்றை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த பாராசூட்டின் நேரடி சோதனை ஓட்டம், லடாக்கில் உள்ள நியோமா பகுதியில் மிக கடுமையான அரிய வகை வான்சூழலில் நடத்தப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 16 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து இந்த நவீன பாராசூட் மூலம் ராணுவ வீரர்கள் கீழே குதித்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, வீரர்கள் எவ்வித ஆபத்துமின்றி திட்டமிட்டபடி நியோமா தரைப்பகுதியில் பத்திரமாக வந்து இறங்கினர். இந்த சோதனை 100 சதவீதம் மிக துல்லியமாக வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்போது சாதிக்கப்பட்டுள்ள இந்த நவீன பாராசூட் தொழில்நுட்பம், இந்திய விமானப்படைக்கு எல்லை பகுதிகளில் வான்வழி தாக்குதல்களையும், மீட்பு பணிகளையும் மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாலய மலைப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த வான்வெளி சாதனையை தொடர்ந்து, இந்த நவீன பாராசூட்டை வெற்றிகரமாக வடிவமைத்து சாதனை படைத்த டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள், அதிகாரிகள் மற்றும் சோதனையில் பங்கேற்ற ராணுவ வீரர்களின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ்குமார் சிங் தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டுள்ளார்.