பெங்களூரு,
வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டு, சமூக வலைதள விளம்பரத்தை நம்பிய பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், சுமார் 12 லட்ச ரூபாய் பணத்தை பறிகொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 33 வயது பெண், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்பியுள்ளார். இதற்காக பேஸ்புக்கில் உள்ள ஒரு பயணப் பக்கத்தை (Travel Page) அணுகியுள்ளார். அங்கிருந்த கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து, அவர்களின் மூலம் பயணத்தைத் திட்டமிட முடிவு செய்துள்ளார்.
அவர்கள் அந்தப் பெண்ணிடம் விசா, விமான டிக்கெட்டுகள் மற்றும் அங்கு தங்குவதற்கான இடங்கள் எனப் பல காரணங்களைக் கூறி, பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ. 12,77,000 வசூலித்துள்ளனர். பணம் முழுவதையும் செலுத்திய பிறகு, திடீரென அந்தப் பயணப் பக்கத்தின் நிர்வாகம் தொழில்நுட்பக் காரணங்களால் "ட்ரிப் ரத்து"செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
அந்தப் பெண் தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, வெறும் ரூ. 1.18 லட்சத்தை மட்டும் திருப்பி அளித்துள்ளனர். மீதமுள்ள சுமார் 11.59 லட்ச ரூபாயை வழங்க மறுத்து, அவரைத் தொடர்பு கொள்ள முடியாதபடி ஏமாற்றியுள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், உடனடியாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், தற்போது வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களின் வங்கி கணக்குகள் மற்றும் பேஸ்புக் பக்கத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.