தேசிய செய்திகள்

இந்தியா வான் எல்லையை மீறியது என சீனா குற்றச்சாட்டு; ‘ட்ரோன்’ கட்டுப்பாட்டை இழந்தது என ராணுவம் பதில்

இந்தியா வான் எல்லையை மீறியது என சீனா குற்றம் சாட்டிய நிலையில் ‘ட்ரோன்’ கட்டுப்பாட்டை இழந்தது என ராணுவம் பதிலளித்து உள்ளது.

புதுடெல்லி,

சீன எல்லைக்கு உள்பட்ட பகுதியில் இந்தியாவின் ட்ரோன் (பறக்கும் கண்காணிப்புக் கேமிரா) உலவியதாகவும் அதனை சீன ராணுவம் சுட்டுவீழ்த்தியதாவும் அந்நாட்டு நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியது. இவ்விவகாரத்தில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்தியா வான் எல்லையை மீறியது என குற்றம் சாட்டியது. அதிருப்தியையும் சீனா வெளிப்படுத்தியது. இந்நிலையில் ட்ரோன் தரை கட்டுப்பாட்டை இழந்தது என இந்திய ராணுவம் பதிலளித்து உள்ளது.

சிக்கிம் செக்டரில் இந்தியாவின் ட்ரோன் வழக்கமான சோதனையில் இந்திய பகுதிக்குள் பயன்படுத்தப்பட்டது, சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரைக்கட்டுப்பாட்டை இழந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிவிட்டது, என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எல்லையில் வழக்கமாக கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் படி இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் உடனடியாக ட்ரோனை கண்டறிய சீன ராணுவத்திடம் கேட்டுக் கொண்டன. பதிலில் சீன தரப்பில் ட்ரோன் இருக்குமிடம் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. விதிமுறைகளின்படி இவ்விவகாரம் கையாளப்படும், என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT