புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கைகள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட காரணங்களால், தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 60 நாட்களுக்கு டிரோன்கள், ஆளில்லா விமான அமைப்புகள்(UAS), பாராகிளைடர்கள், ஹேங்-கிளைடர்கள் மற்றும் ஏரோ-மாடல்களை இயக்குவதற்கு டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட கொண்டாட்டங்கள், விழாக்கள் அல்லது பிற நிகழ்வுகளின்போது, விமான நிலையத்தின் அதிகார வரம்பிற்குள்ளும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள், மண்டபங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், கட்டிடங்கள் மற்றும் பிற இடங்களில் லேசர் ஒளியை பயன்படுத்துவதற்கும் காவல்துறை தடை விதித்துள்ளது.
முன்னதாக விமானங்கள் தரையிறக்கும்போது, லேசர் கற்றைகளால் விமானிகள் கவனச்சிதறலுக்கு உள்ளாவதாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம்(ATC) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.