காந்திநகர்,
குஜராத் கடல் பகுதியில் சுமார் 385 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 6 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து நடுக்கடலில் ரகசியத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த பாகிஸ்தான் படகை வழிமறித்துச் சோதனையிட்டதில், சுமார் 76.936 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு 385 கோடி ரூபாய் ஆகும்.
இந்தக் கடத்தல் தொடர்பாகப் படகில் இருந்த 6 பாகிஸ்தான் நாட்டினரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு குஜராத் மாநிலம் புஜ் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 6 பாகிஸ்தானியர்களுக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.