தேசிய செய்திகள்

போதையில் உள்ளூர் மக்களை அடித்து, உதைத்த சுற்றுலா பயணிகள்; வைரலான வீடியோ

படகோட்டிகளான மொகித் மற்றும் ஜீத்பால் ஆகிய 2 பேர் தாக்கப்பட்டனர்.

புதுடெல்லி

போதையில் உள்ளூர் மக்களை அடித்து, உதைத்த பெண் உள்பட சுற்றுலா பயணிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியை சேர்ந்த சிலர் உத்தராகண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் பகுதியில், சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். சென்ற இடத்தில் ஜீப்பில் அமர்ந்து மதுபானம் குடித்துள்ளனர். சுற்றுலா தலத்தில் மற்றும் பொது வெளியில் இதுபோன்று மதுபானம் குடிக்க வேண்டாம் என போதையில் இருந்த அவர்களிடம் உள்ளூர்வாசிகள் சிலர் கூறியுள்ளனர்.

போதை ஆசாமிகள்

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, போதை ஆசாமிகள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், படகோட்டிகளான மொகித் மற்றும் ஜீத்பால் ஆகிய 2 பேர் தாக்கப்பட்டனர்.

அந்த 2 பேரையும் அடித்து, உதைத்து, ஆடைகளை கழற்றி விட்டு கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதில் பெண் ஒருவரும் ஈடுபட்டு உள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண் உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்து 3 மணிநேரத்திற்குள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.