பரித்கோட்,
பஞ்சாப் மாநிலம் பரித்கோட்டில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 மாணவர்கள் இருநாட்களுக்கு முன்பு போலீசாரால் தாக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டம் தொடர்பாக தகவல் அறிந்ததும் டிஎஸ்பி பல்ஜிந்தர் சிங் சாந்து (வயது 50) மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் நடத்திய மாணவர்கள் பல்ஜிந்தர் சிங் சாந்துவை சூழ்ந்து கொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருடைய நேர்மையை சந்தேகிக்கும் வகையில் கேள்விகளை எழுப்பினர்.
இதனால் மனம் உடைந்த பல்ஜிந்தர் சிங் சாந்து திடீரென தன்னுடைய துப்பாக்கியை எடுத்து தன் தலையில் வைத்து தன்னை தானே சுட்டுக்கொண்டார்.
இதை கண்டு அங்கிருந்த போலீசாரும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உயிரிழந்த டிஎஸ்பி பல்ஜிந்தர் சிங் சாந்துவிற்கு மனைவியும், 21 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் பேசுகையில் மிகவும் துரதிஷ்டவசமானது. இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்றார்.