போபால்
மராட்டியத்தில் மிஸ் புனே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் துவிஷா சர்மா (வயது 31). முன்னாள் புனே அழகியான இவருக்கு, வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கணவர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் கிரிபலா சிங் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கணவர் வீட்டில் தூக்கு போட்டு துவிஷா தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது என கூறி உடலுக்கு இறுதி சடங்கு செய்யாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடைய புகாரின் பேரில் வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். துவிஷா தற்கொலை செய்வதற்கு முன்பு நரகத்தில் இருக்கிறேன். என்னை அழைத்து செல்லுங்கள் என்று தாயார் மற்றும் தோழிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் சமர்த் சிங் தப்பியோடி விட்டார். அவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட துவிஷா சர்மாவின் குடும்பத்தினரை மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அரசு சார்பில் இந்த வழக்கில் அனைத்து வகையிலான ஆதரவும் வழங்கப்படும் என அப்போது அவர்களுக்கு உறுதி கூறினார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி கடிதம் எழுதுவோம் என்றும் அவர் கூறினார்.
அதற்கு முன் துவிஷா சர்மாவின் தந்தை நவ்நிதி சர்மா கூறும்போது, குற்றவாளியை பாதுகாக்கும் முயற்சி நடக்கிறது. அரசு இந்த விவகாரத்தில் முன்வந்து உதவ வேண்டும் என கேட்டு கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில், பலருடைய செல்வாக்கு இருப்பது தெரிகிறது. உண்மைகள் மூடி மறைக்கப்பட்டு உள்ளன. முழுமையான விசாரணையிலேயே அவை பற்றி தெரிய வரும்.
நீதிமன்ற நடைமுறையையே அவர்கள் ஜோடித்துள்ளனர். சான்றுகளை அழித்துள்ளனர். உடலை மறுஆய்வு செய்ய முடியாத அளவுக்கு உள்நோக்கத்துடன், செயல்பட்டனர். உடலில் இருந்து தடய அறிவியல் சார்ந்த கண்டறிதல்களை அவர்கள் தடுக்கின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இதனை அரசு கவனத்தில் எடுத்து கொள்ளாவிட்டால், அதன் பல்வேறு மக்கள் நல அறிவிப்புகளும், முக்கிய திட்டங்களும் பயனற்று போகும். இதனால், நிலைமை அரசுக்கு எதிராகவே திரும்ப கூடும் என்றும் அவர் கூறினார்.