கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் எத்தனால் கலப்பு 31.2 சதவீதம் வரை இருப்பதாக அம்மாநில அரசு வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
இ20 பெட்ரோல் தற்போது 420 ஆக மாறிவிட்டது. பொதுமக்களின் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுகிறது. பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுவதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், கர்நாடக அரசு அந்த மாநிலத்தின் 7 மாவட்டங்களில் இருந்து பெட்ரோல் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தது. இதில் 14 மாதிரிகளில் 11 மாதிரிகளில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், வாகன ஓட்டிகள் அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்கினாலும், அவர்களது வாகனங்களில் எத்தனால் அதிக அளவில் நிரப்பப்படுவது தெரியவந்துள்ளது. மேலும், பெட்ரோல் நிலையங்களில் எத்தனால் கலப்பு குறித்த விவரங்களும் குறிப்பிடப்படுவதில்லை. இதனால், தங்களது வாகனங்களில் என்ன வகையான எரிபொருள் நிரப்பப்படுகிறது என்பதை நுகர்வோரால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
நமது வாகனங்களில் நிரப்பப்படும் எரிபொருள் என்ன என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும். பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது? 20 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் கலந்து பெட்ரோல் விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? மேலும், பொதுவெளியில் என்னுடன் விவாதம் நடத்துவதற்கு நான் விடுத்த சவால் இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த விவாதத்தின்போது இந்தப் பிரச்சினை குறித்தும் பேசலாம்” என்று தெரிவித்துள்ளார்.