தேசிய செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் 5.1 ஆக பதிவு

நிலநடுக்கத்திற்கு முன்பாக, அதிகாலையில் தொடர்ந்து 3 முறை சிறிய அளவிலான நில அதிர்வுகள் அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளன.

இட்டாநகர்,

அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் இன்று காலை 5.45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் 5.1 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்கு முன்பாக, இன்று அதிகாலையில் தொடர்ந்து 3 முறை சிறிய அளவிலான நில அதிர்வுகள் அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளன. இதன்படி அதிகாலை 3.40 மணிக்கு ரிக்டர் 2.8 அளவில் லேசான நில அதிர்வும், 3.55 மணிக்கு ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து 4.34 மணிக்கு 2.8 அளவிலான நில அதிர்வும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், காலை 5.45 மணிக்கு ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு, காலை 7.17 மணிக்கு ரிக்டர் 3.5 அளவில் மற்றொரு சிறிய அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. கிழக்கு இமயமலைக்கு அடியில் உள்ள சிக்கலான நிலப்பிளவு அமைப்புகளின் காரணமாக, அருணாச்சல பிரதேசம் மற்றும் அதனை உள்ளடக்கிய வடகிழக்கு பிராந்தியங்களில் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT