தேசிய செய்திகள்

சென்னை வருகிறார் அமலாக்கத் துறை தலைமை இயக்குநர்

தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகள் குறித்து அதிகாரிகளுடன் ராகுல் நவீன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழக டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில், அமைச்சர் கே.என். நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன் இன்று சென்னை வருகிறார். தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் இருந்து வருகை தரும் ராகுல் நவீன் சென்னையில் 3 நாட்கள் முகாமிட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.