மும்பை,
இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் அனில் அம்பானி. அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவரான இவர் ரிலையன்ஸ் பவர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதனிடையே, ரிலையன்ஸ் பவர் உள்பட ரிலையன்ஸ் குழுமத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், அனில் அம்பானி ரூ.40 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அனில் அம்பானி வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தியது. மேலும், பணமோசடி வழக்கு தொடர்பாக அனில் அம்பானியில் ரூ. 15 ஆயிரத்து 700 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது.
இந்நிலையில், பணமோசடி வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. மும்பை, ஐதராபாத் ஆகிய 2 பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.