தேசிய செய்திகள்

டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே இருக்கும் சூழலில், அதிமுக தொகுதி பங்கீடு இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவிடம் இருந்து பாஜக 30 தொகுதிகளும், அமமுகவுக்கு 8 தொகுதிகளும், சிறு கட்சிகளுக்கு 12 தொகுதிகளும் என மொத்தம் 50 சீட்கள் கேட்பதாக சொல்லப்படுகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெறுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கே சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், 2 மணி நேரமாக அமித்ஷாவின் அழைப்புக்காக நட்சத்திர ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமி காத்திருந்தார்.

பின்னர் 2 மணி நேர காத்திருப்புக்குப்பின் அமித்ஷா அழைத்ததை அடுத்து அவரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். தற்போது அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் ஆலோசனை நடந்து வருகிறது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.