தேசிய செய்திகள்

கோழிக்கோட்டில் போதைப்பொருள் கடத்தி விற்ற 8 பேர் கைது

வாடகைக்கு வீடு எடுத்து போதைப்பொருள் கடத்தி விற்று கிடைத்த பணம் மூலம் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் உயர்ரக போதைப்பொருட்களை கடத்தி வந்து ரகசியமாக விற்பனை செய்வதாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் பன்னீரங்காவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வாடகை வீட்டில் சோதனை

பாலாழி ஹைலைட் வணிக வளாகம் அருகே, பள்ளிக்கூடம் செல்லும் சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் போதைப்பொருள் கும்பல் தங்கியிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த வீட்டை அதிரடியாக சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

போதைப்பொருள்

அப்போது அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 93.30 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள், 7 கிராம் மெத்தபெட்டமைன், 12 கிராம் கஞ்சா எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கிருந்த 8 பேரிடம் இருந்த கவர்களில் 124 சிறிய பாட்டில் களில் போதைப்பொருள் இருப்பதும், போதைப்பொருள் புகைக்க 3 சிறிய குழாய்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

8 பேர் கைது

விசாரணையில் அவர்கள் கோழிக்கோடு மாவட்டம் கற்கோடி அருகே உள்ள கிழக்கு முரி பகுதியை சேர்ந்த லுப்தான் அலி (வயது 22), மலப் புரம் மாவட்டம் அரிக்கோடு பகுதியை சேர்ந்த ஜிப்ரி அல்ஹாஸ் (22), கீராலூரை சேர்ந்த முகம்மது ரஷ்தான் (22), தெற்கு கடற்கரை பரப்பில் பகுதியை சேர்ந்த முகமது (30), தியா முகமது பக்பானி, (22), முகமது நாஸ் (28), முகமது ஸஹதுல் அபம் (25), நடக்காவு பகுதியை சேர்ந்த முகமது அன்சாத் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.