கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உருவானது ‘எல்நினோ'.. உயரும் வெப்பநிலை.. இந்தியாவுக்கு என்ன பாதிப்பு..?

ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காலாண்டில் மிதமான முதல் வலுவான எல்நினோ நிலையை காட்டுகின்றன.

புதுடெல்லி,

எல்நினோ உருவானது

'எல்நினோ' பசிபிக் பெருங்கடலில் நடக்கும் ஒரு தற்காலிக காலநிலை மாற்றம் ஆகும். வழக்கமாக பசிபிக் பெருங்கடலின் மேற்பகுதியில் வெப்பமான நீரும், கிழக்கு பகுதியில் குளிர்ந்த நீரும் இருக்கும். ஆனால் எல்நினோ காலத்தில் அது அப்படியே தலைகீழாக மாறி மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தைவிட அதிக வெப்பம் அடையும். உலகெங்கும் உள்ள வானிலையை தலைகீழாக மாற்றும் வல்லமை கொண்டது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (என்.ஓ.ஏ.ஏ.) இந்த ஆண்டின் இறுதிக்குள் பசிபிக் கடலின் வெப்பநிலை வழக்கமான அளவைவிட 2 செல்சியசுக்கும் அதிகமாக உயர 60 சதவீதம் வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது. அவ்வாறு வெப்பநிலை உயர்ந்தால், அதை சூப்பர் எல்நினோ என்று சொல்வார்கள். பொதுவாக பசிபிக் கடலின் மேற்பரப்பு வழக்கமான அளவைவிட 0.5 செல்சியஸ் அதிகரித்தாலே அதனை எல்நினோ என்று அறிவிக்கப்படும்.

அந்தவகையில் தற்போது வழக்கத்தைவிட 0.7 செல்சியஸ் என்ற அளவை தொட்டுவிட்டதால், எல்நினோ காலம் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

பசிபிக் பெருங்கடலின் பெருமளவிலான பரப்பு வெப்பமடைவதால், பூமியின் சராசரி உலகளாவிய வெப்பநிலை கணிசமாக உயரும். இது உலக வெப்பமயமாதலை மேலும் தீவிரப்படுத்தும்.

அதாவது இந்தியாவின் வாழ்வாதாரமாக இருக்கும் தென்மேற்கு பருவமழை எல்நினோ காலங்களில் வழக்கத்தைவிட குறைய வாய்ப்பு அதிகம் என்றும், சராசரி மழைப்பொழிவு 90 சதவீதம் என்ற அளவிலே இருக்கும் என்றும், இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்த மழைப் பொழிவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

மழை குறையும்போது நெல், கரும்பு போன்ற பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும். இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகளும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படலாம்.

நடு நிலையான சூழல்

எல்நினோ தாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய சுமார் 150 முதல் 200 மாவட்டங்களை மத்திய அரசு கண்டறிந்து, விவசாயப் பாதிப்புகளைக் குறைக்க மாநில வாரியான அவசரக்காலத் திட்டங்களை தயார்செய்து வருகிறது.

ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காலாண்டில் மிதமான முதல் வலுவான எல்நினோ நிலையை காட்டுகின்றன. இதன்படி இந்தியப் பெருங்கடலில் தற்போது 'நடு நிலையான சூழல் நிலவுகிறது. இது பருவமழைக்கு ஓரளவு சாதகமாக இருந்தாலும், தீவிரமடையும் எல்நினோவின் தாக்கத்தை முற்றிலுமாக ஈடுகட்ட இது போதுமானதாக இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து நிலவரங்களை கண்காணித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.