தேசிய செய்திகள்

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி குடியரசு தலைவருக்கு மனு செய்த வயது முதிர்ந்த தம்பதி

சமூகத்திற்கு எந்த பலனும் இல்லாத நிலையில் தற்கொலை செய்ய அனுமதி கோரி வயது முதிர்ந்த ஒரு தம்பதி குடியரசு தலைவருக்கு மனு செய்துள்ளனர்.

மும்பை,

தெற்கு மும்பையில் சார்னி சாலையில் வசித்து வரும் தம்பதி நாராயண் லவாடே (வயது 88) மற்றும் அவரது மனைவி ஐராவதி (வயது 78). லவாடே மகாராஷ்டிர மாநில போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி பள்ளியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்த நிலையில் குடியரசு தலைவருக்கு லவாடே அனுப்பியுள்ள 2017ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதியிட்ட மனுவில், நான் மற்றும் எனது மனைவி நல்ல உடல் நலத்துடன் உள்ளோம். எங்களுக்கு எந்தவித கடுமையான வியாதியும் இல்லை.

எங்களுக்கு சில கடுமையான வியாதி வரும் வரை உயிருடன் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது சரியானது அல்ல. நாங்கள் சமூகத்திற்கோ அல்லது எங்களுக்கோ எந்தவித பயனும் இன்றி இருக்கிறோம். எங்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. எங்களது சகோதர சகோதரிகளும் இறந்து விட்டனர்.

எங்களது விருப்பத்திற்கு எதிராக நாங்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்பது நாட்டின் பற்றாக்குறையாக உள்ள வளத்தினை வீணடிக்கும் செயல் ஆகும். எங்களது மரணத்திற்கு பின்னர் எங்களது உடல்களை நன்கொடையாக அளிப்பதற்கு முன்பே முன்வந்து விட்டோம். எங்களிடம் உள்ள குறைந்த அளவிலான செல்வத்தினையும் மாநில கருவூலத்திற்கு அளிக்க முன்வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, குடியரசு தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டும் அதிகாரம் உள்ளது. நாங்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறோம். எங்களது வாழ்க்கையை முடித்து கொள்வதற்கு அனுமதி அளித்து குடியரசு தலைவர் எங்களுக்கு கருணை காட்ட முடியும் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT