பீகார்,
பீகார் மாநிலத்தில் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பதிவான ஒரு கொலை முயற்சி வழக்கில், தற்போது 84 வயதாகும் தீப் ராய் என்ற முதியவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சரியாக நடக்கக் கூட முடியாமல் பிறரின் உதவியோடு தட்டுத்தடுமாறி அந்த முதியவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரிடையே பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஒரு மோதல் சம்பவம் நடந்தது. அதாவது, அதாலத் ராய் என்பவரது வீட்டின் அருகே உள்ள பாதையில், தீப் ராய் என்பவர் தனது குடும்பத்தார் மற்றும் ஆயுதங்களைக் கொண்டிருந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து உடைந்த கண்ணாடி துண்டுகளைப் போட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கேள்வி எழுப்பியதால், அந்த கும்பல் அதாலத் ராய் மற்றும் அவரது மனைவியை கடுமையாகத் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 1993 ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதியன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த சம்பவம் குறித்த வழக்கில் 10 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே, இதில் சம்பந்தப்பட்ட 4 பேர் உயிர் இழந்துவிட்டனர்.
இந்நிலையில், கடந்த 33 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி, தீப் ராயைக் கலவரம் செய்தல், பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் நீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்தது.
இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகு, வாழும் காலத்தின் இறுதிக்கட்டத்தில் இந்த முதியவருக்கு கிடைத்துள்ள இந்த சிறை தண்டனை மற்றும் நாட்டின் சட்ட நடைமுறைகளில் ஏற்படும் காலதாமதம் குறித்த விவாதங்களையும் மக்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.