தேசிய செய்திகள்

நடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவர்; சி.பி.ஆர். முதலுதவி செய்து காப்பாற்றிய போலீஸ்காரர்

முதியவரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர் சந்தீப்குமாருக்கு பாராட்டு சான்றிதழ் காவல் ஆணையர் தருண் கிருபா வழங்கினார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் நடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவருக்கு சி.பி.ஆர். முதலுதவி செய்து போலிஸ்காரர் காப்பாற்றினார்.

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டம் ரஹீம் நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் சந்தீப் குமார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் லக்னோ மஹாநகர் சந்திப்பில் உள்ள சாலையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த கான்ஸ்டபிள் சந்தீப் குமார் வேகமாக ஓடிச்சென்று முதியவருக்கு முதலுதவி அளித்தார்.

முதியவர் மயங்கிய நிலையில் கிடந்ததையடுத்து அவருக்கு கான்ஸ்டபிள் சந்தீப் குமார் இதய நுரையீரல் புத்துயிரூட்டல் சிகிச்சை (சி.பி.ஆர். ) அளித்தார். இதையடுத்து, முதியவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட அவர் கண்விழித்தார்.இதையடுத்து, ஆம்புலன்சை வரவழைத்து முதியவரை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்.

உரிய நேரத்தில் முதலுதவி அளித்து முதியவரின் உயிரை காப்பாற்றி சிகிச்சைக்கு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்த கான்ஸ்டபிள் சந்தீப்பின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் முதியவரின் உயிரை காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள் சந்தீப் குமாரை லக்னோ காவல்துறை ஆணையர் தருண் கிருபா நேரில் அழைத்து பாராட்டியதோடு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

SCROLL FOR NEXT