முதியவர் பேருந்திலிருந்து தவறி விழுந்தார். 
தேசிய செய்திகள்

பேருந்தில் இருந்து தடுமாறி விழப்போன முதியவர்... விரைந்து காப்பாற்றிய இளைஞர் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

முதியவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கண்ணூரில் தனியார் பேருந்தில் ஏற முயன்றபோது, பேருந்து இயங்கியதால் கால் தடுமாறி பின்னோக்கி விழவிருந்த முதியவரை, பேருந்து ஊழியர் ஒருவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சாதுரியமாக காப்பாற்றினார்.

பேருந்திலிருந்து கீழே தவறி விழப்போன முதியவர்

கண்ணூர் - குட்டியாட்டூர் தடத்தில் 'பத்தாம் மைல்' என்ற இடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சுமார் 8:45 மணியளவில் 'பார்வதி' என்ற தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது முதியவர் ஒருவர் பேருந்தின் படிக்கட்டில் ஏறியுள்ளார். அவர் முழுமையாக ஏறுவதற்குள் பேருந்து மெதுவாக செல்லத் தொடங்கியது. இதில் நிலைதடுமாறிய முதியவர், படிக்கட்டுகளில் இருந்து பின்னோக்கி தலைகுப்புற விழப் போனார்.

காப்பாற்றிய வாலிபர்

அந்த நொடியில், பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த கொளச்சேரியைச் சேர்ந்த பேருந்தின் கிளீனர் அதுல் (வயது 30) என்பவர், சீறிப்பாய்ந்து வந்து முதியவரின் கைகளையும் உடலையும் கெட்டியாகத் தாங்கிப் பிடித்தார். இதனால் முதியவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வீடியோ வைரல்

பேருந்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியிருந்தன. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து, சரியான நேரத்தில் சாதுரியமாகச் செயல்பட்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் அதுலுக்கு தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.