தேசிய செய்திகள்

வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு

வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

புதுடெல்லி,

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 135B-இன் படி, வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் மக்களவை அல்லது மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

இத்தகைய ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்காக ஊழியர்களின் ஊதியத்தில் எந்தக் பிடித்தமும் செய்யப்படக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறும் எந்தவொரு முதலாளியும் அபராதத்திற்கு உள்ளாவார்கள். அனைத்து தினக்கூலி மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறத் தகுதியுடையவர்கள்.

தொழில்துறை அல்லது வணிக நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்கள், தங்கள் தொகுதிக்கு வெளியே பணிபுரிந்தாலும், தேர்தல் நடைபெறும் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்திருந்தால், அவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறத்தகுதியுடையவர்கள் (தற்காலிக மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் உட்பட) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுவதற்கும், அனைத்து வாக்காளர்களும் சுதந்திரமாகவும் வசதியாகவும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும் தேவையான உத்தரவுகளை அனைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கும் பிறப்பிக்குமாறு மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.