புதுடெல்லி,
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்.) கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பிக்காததால் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 4.51 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், மீண்டும் தங்களது பெயர்களைச் சேர்த்துக்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதுதொடர்பாக கடந்த அக்டோபர் 28-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஏற்கெனவே வாக்காளர்களாக இருந்தவர்கள் மீண்டும் படிவம் 6-ஐ ஏன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விடுபட்டவர்களுக்கு ஏற்கெனவே நிரப்பப்பட்ட கணக்கெடுப்புப் படிவத்தையே மீண்டும் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கலாம் என்றும் கருத்து தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, தனது நடைமுறையில் மாற்றம் செய்துள்ள தேர்தல் ஆணையம், ஏற்கெனவே நிரப்பப்பட்ட கணக்கெடுப்புப் படிவத்தை மீண்டும் சமர்ப்பிக்க அனுமதி அளித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை டெல்லி, மராட்டியம், அரியானா, ஆந்திரப்பிரதேசம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, நாகாலாந்து ஆகிய 7 மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்த மாநிலங்களில் மொத்தம் 4 கோடியே 51 லட்சத்து 76 ஆயிரத்து 997 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.
மாநில வாரியாக நீக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:-
மராட்டியம் - 2.06 கோடி
தெலுங்கானா - 73.39 லட்சம்
டெல்லி - 47.56 லட்சம்
ஆந்திரப்பிரதேசம் - 44.89 லட்சம்
ஜார்க்கண்ட் - 43.61 லட்சம்
அரியானா - 33.83 லட்சம்
நாகாலாந்து - 1.07 லட்சம்
காணவில்லை, இடம் மாறியவர், இறந்தவர், இரட்டைப் பதிவு உள்ளிட்ட காரணங்களால் பெயர்கள் நீக்கப்பட்டவர்களுக்கும், கணக்கெடுப்புப் படிவம் வழங்கப்பட்டும் அது தேர்தல் ஆணையத்துக்குத் திரும்பக் கிடைக்காததால் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கும் இந்த வாய்ப்பு பொருந்தும்.
மீண்டும் பெயர் சேர்க்க விரும்புவோர், தங்களுக்கென ஏற்கெனவே நிரப்பப்பட்ட கணக்கெடுப்புப் படிவத்தைப் பெற்று, உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் படிவத்தைச் சமர்ப்பிக்க முடியாததற்கான காரணத்தை விளக்கும் அறிக்கையையும் இணைக்க வேண்டும்.
தகுதியுள்ள எவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதுடன், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதையும் தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை திடீர் பின்வாங்கல் என்றும், வாக்காளர்களின் பெயர்களைத் தவறாக நீக்கி அவர்களின் வாக்குரிமையைப் பறித்ததைத் தாமதமாக ஒப்புக்கொண்டதையே இது காட்டுகிறது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.