ராய்பூர்,
90 இடங்களை கொண்ட சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியே தொடர்ச்சியாக முன்னிலைப் பெற்று வருகிறது. பா.ஜனதா எட்டமுடியாத அளவு அதிகமான தொகுதியில் முன்னிலை பெற்றுள்ள காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சியமைக்க உள்ளது என்பதையே நிலவரம் காட்டுகிறது.
66 தொகுதிகள்
90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கரில் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை 46 ஆகும். ஆனால் காங்கிரஸ் அதைவிட 20 தொகுதிகளில் கூடுதலாக முன்னிலையை பெற்றுள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
பா.ஜனதாவின் நிலை மிகவும் மோசமானதாகியுள்ளது. அக்கட்சி 17 தொகுதிகளில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது.
பறிகொடுக்கும் பா.ஜனதா
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஷ்கர் 2000ம் ஆண்டில் பிரித்து தனி மாநிலம் ஆக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் ஜோகி முதல்வராக பதவி வகித்தார். 2003ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. ராமன்சிங் முதல்மந்திரி ஆனார். பின்னர் 2008, 2013 தேர்தல்களிலும் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியில் தொடர்ந்தது. ராமன்சிங் தொடர்ந்து 3 முறை முதல்மந்திரி பதவி வகித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இப்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பறிகொடுக்கிறது. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரம் காட்டிய காங்கிரசுக்கு சாதகமாக முடிவு அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து அஜித் ஜோகி தொடங்கிய ஜனதா காங்கிரஸ் , மாயாவதியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு எந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.