தேசிய செய்திகள்

எல்.முருகன் ராஜினாமா செய்த எம்.பி. பதவிக்கு நவ.12ம் தேதி தேர்தல்

காலியாக உள்ள இடத்திற்கு நவம்பர் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

எல்.முருகன் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள எம்.பி. இடத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. முன்னதாக மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வாகியிருந்தார் எல்.முருகன்.

மத்திய மந்திரி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இணை மந்திரியாக இருந்தவர் எல்.முருகன். தமிழ்நாட்டை சேர்ந்தவரான எல்.முருகன், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி முதல் முறையாக மத்திய மந்திரியானார். அப்போது அவருக்கு தகவல்-ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது.

5 பக்க கடிதம்

2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றபோதும், எல்.முருகனுக்கு இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த முறை தகவல்-ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டது.

அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இரு முறை தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிலையில் எல்.முருகன், கடந்த 14-ம் தேதி தனது மந்திரி பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் விலகினார். தனது ராஜினாமா தொடர்பாக பிரதமர் மோடிக்கு, அவர் 5 பக்க கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார்.

ராஜினாமா

கடந்த 11-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வந்து சென்ற பிறகு, மூன்று நாட்கள் இடைவெளியிலேயே எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள இடத்திற்கு நவம்பர் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பிரமுகர்

2030-ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில், நவம்பர் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடந்து அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் யாருக்காவது இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

SCROLL FOR NEXT