தேசிய செய்திகள்

‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்டர்நெட்டுடன் இணைக்கப்படுவதில்லை’ - தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார்

எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம் என ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோல்வின் தாலுக்தார்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின்போது இந்தியாவின் ஜனநாயக அமைப்பு, தேர்தல் நடைமுறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின்(EVMs) நம்பகத்தன்மை மற்றும் இளம் வாக்காளர்களின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஞானேஷ் குமார், “இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை. அவை இன்டர்நெட் அல்லது புளூடூத், வைபை போன்ற வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படுவதில்லை.

இன்றைய சமூக ஊடக சூழலில், தகவல்களை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பாக அவற்றின் மூலத்தையும், நம்பகத்தன்மையையும் சரிபார்க்க வேண்டும். எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம்.

நாட்டில் சுமார் 100 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவ்வளவு பெரிய வாக்காளர் எண்ணிக்கையைக் கொண்ட ஒரு நாட்டிற்குத் தேர்தல் நடத்துவதே ஒரு மிகப்பெரிய பணியாகும். தேர்தல் செயல்முறை சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய ஏராளமான அதிகாரிகளும், ஊழியர்களும் பணியாற்றுகின்றனர்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT