தேசிய செய்திகள்

மதம் பிடித்து சுற்றித்திரியும் படையப்பா யானை: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

பஸ், கார், ஆட்டோவின் கண்ணாடிகளை படையப்பா யானை உடைத்து சேதப்படுத்தியது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு, மறையூர் எஸ்டேட் பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் இரவு, பகல் நேரங்களில் காட்டு யானை ஒன்று கம்பீரமாக சுற்றித்திரியும். இந்த யானைக்கு இப்பகுதி பொதுமக்கள் படையப்பா என்று பெயர் வைத்து அழைக்கின்றனர்.

இந்தநிலையில் அந்த யானை கடந்த சில நாட்களாக மூணாறு மற்றும் மறையூர் சாலைகளில் செல்லும் வாகனங்களை அடிக்கடி மறித்து சேதப்படுத்தி விட்டு செல்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு பஸ், கார், ஆட்டோவின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த படையப்பா யானையை ஆய்வு செய்தபோது அதற்கு மதம்பிடித்து சுற்றித்திரிவது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் அந்த யானையை 24 மணி நேரம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அந்த யானை எங்கு செல்கிறது. அதன் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்று பார்த்து வருகின்றனர். இதனால் மூணாறு மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.