தேசிய செய்திகள்

45 லிட்டர் டேங்கிற்கு 52 லிட்டர் பெட்ரோல் போட்டதாக பில் கொடுத்த ஊழியர்.. அதிர்ச்சி அடைந்த கார் உரிமையாளர்

காரின் மொத்த எரிபொருள் கொள்ளளவு 45 லிட்டர் மட்டும்தான் ஆனால், அந்த பில்லில் 52 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கான்பூர்,

வேல்ஸ்வேகன்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரண் சிங் என்ற இளைஞர், கான்பூரில் உள்ள கார் ஷோரூமிற்கு சென்று புதிய வோக்ஸ்வாகன் (Volkswagen) காரை வாங்கினார். அந்த கார் சிறிது தூரம் வரும் போது, காரின் பெட்ரோல் டேங்க்கில் எரிபொருள் தீரப்போவதாக எச்சரிக்கை காட்டியுள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்று புல் டேங்க் பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளார்."

அதிர்ச்சி

 அங்கிருந்த ஊழியர் எரிபொருள் நிரப்ப தொடங்கினார். அவர் சரியாக 41 லிட்டர் அளவை எட்டியவுடன் பாதியிலேயே நிறுத்தினார். இதை கண்ட சரண் சிங், அந்த ஊழியரிடம் கேள்வி கேட்க தொடங்கினார். அதற்கு அந்த ஊழியர், 'அதிகப்படியாக எரிபொருள் நிரப்பும்போது இரண்டு முறையாகத்தான் நிரப்ப வேண்டும்' என்று கூறினார். அதன் பின்னர், முழுமையாக நிரப்பியதும் அந்த ஊழியர் எரிபொருளுக்கான பில்லை கொடுத்துள்ளார். அதை பார்த்த சரண் சிங் அதிர்ச்சி அடைந்தார்.

45 லிட்டர்

 காரின் மொத்த எரிபொருள் கொள்ளளவு 45 லிட்டர் மட்டும்தான் ஆனால், அந்த பில்லில் 52 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சரண் சிங் காரை வாங்கி வந்த ஷோரூமிலேயே குறைந்தபட்சம் 5 லிட்டர் பெட்ரோலாவது நிரப்பியிருப்பார்கள். அப்படி பார்த்தாலும், காரில் அதிகபட்சம் 40 -45 லிட்டர் மட்டும்தான் நிரப்ப முடியும்.

வீடியோ

இதனால் கோபமடைந்த அவர், அந்த பெட்ரோல் நிலையத்திலிருந்தபடியே தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த மோசடி தொடர்பான வீடியோவை வெளியிட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கும் உடனடியாக புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், இந்த மோசடி தொடர்பாக தீவிர விசாரணையை தொடங்கினர்.