காந்தி நகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஹர்ஷத் கடியார் என்ற ஊழியர் பணியாற்றி வந்தார். இவர் வங்கி பெட்டத்தின் இணை காப்பாளராக (Joint Custodian) பணியற்றி வந்தார். வங்கி பெட்டகத்தில் பிற வங்கிகளுக்கு அனுப்புவதற்காக ரிசர்வ் வங்கியின் பணமும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வங்கி பெட்டகத்தில் இருந்த பணத்தில் ரூ. 8.70 கோடியை பெட்டக இணை காப்பாளர் ஹர்ஷத் கடியார் திருடியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி குப்பையை எடுத்து செல்வதாகக்கூறி வங்கியில் இருந்த ரூ. 8.70 கோடியை கட்டுகட்டாக எடுத்து சென்றுள்ளார்.
அதேவேளை, ரிசர்வ் வங்கியின் பணத்தை தங்கள் வங்கிக்கு எடுத்து செல்ல மற்றொரு வங்கியின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பேங்க் ஆப் பரோடா வங்கி கிளைக்கு வந்துள்ளனர். வங்கி பெட்டகத்தை ஆய்வு செய்தபோது வங்கியில் இருந்து ரூ. 8.70 கோடி பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி மேனேஜர் உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாராணையில் வங்கி ஊழியரும், பெட்டக இணை காப்பாளருமான ஹர்ஷத் கடியார் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொள்ளையடித்த பணத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள பங்களா, ரூ. 1.40 கோடிக்கு சொத்துகள், கார் உள்ளிட்டவற்றை ஹர்ஷத் வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும், கிரிப்டோ போன்ற பங்கு வர்த்தகங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். இதையடுத்து, கொள்ளையடித்த பணத்தில் ரூ. 2.20 கோடியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.