திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லத்தில் ‘இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு' (NCCF) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பல்வேறு கூட்டுறவு சங்க திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
“நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு 'கேரளா' என்பது 'கேரளம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, இங்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் கூட்டுறவுக்கென தனி மத்திய அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கி, நாட்டின் கிராமப்புற மேம்பாடு, விவசாய வளர்ச்சி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டார்.
கூட்டுறவு அமைப்புகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாகும். ஒரு பெண் செழிப்படைந்தால், ஒட்டுமொத்த குடும்பமும் செழிப்படையும் என்பதை பிரதமர் மோடி நன்கு உணர்ந்துள்ளார் 'கூட்டுறவு மூலம் செழிப்பு' என்ற கோட்பாடு, நமது நாட்டின் கிராமப்புற மற்றும் ஏழைப் பெண்களை மையமாகக் கொண்டதாகும்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10-12 ஆண்டுகளில் பெண்கள் சக்தியை ஊக்குவிப்பதற்கும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு வசதிகளின் காரணமாக, தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு 2014-15ல் 23 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுமார் 36 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, 'முத்தலாக்' முறையைத் தடை செய்யும் நடவடிக்கையை நரேந்திர மோடி மேற்கொண்டார். முன்பு முஸ்லிம் பெண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இப்போது அவர்கள் ஆண் துணை இல்லாமலேயே அந்த புனிதப் பயணத்தை மேற்கொள்ள முடியும்.
இன்று, 11,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்திய ஆயுதப்படைகளில் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். மகப்பேறு விடுப்பு காலத்தை 26 வாரங்களாக உயர்த்தும் நடவடிக்கை மோடி அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
'லட்சாதிபதி தீதி' (Lakhpati Didis) திட்டத்தின் கீழ் 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக உருவாக்குவதற்கான இலக்கு 2024-க்கு முன்பே எட்டப்பட்டது. 2029-க்குள் இந்த எண்ணிக்கையை 6 கோடியாக உயர்த்த பா.ஜ.க. அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.