தேசிய செய்திகள்

பினராயி விஜயன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மேல்முறையீடு

பினராயி விஜயன் வீடு உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

திருவனந்தபுரம்,

கேரளம் மாநிலம் முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன். இவரது மகள் வீணா விஜயன். இவருக்கு சொந்தமான எக்சலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு கொச்சின் தாது மணல் ஆலை நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்.) ரூ.1.72 கோடி சட்டவிரோதமாக பணம் வழங்கியதாக 2016-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக 2019-ம் ஆண்டு வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. இதில் சி.எம்.ஆர்.எல். நிறுவனம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்திருப்பதை கண்டுபிடித்தது. தொடர்ந்து பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனால் விசாரணை பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட்டு, விசாரணை நடத்த தடையில்லை என அறிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 27-ந் தேதி முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மருமகன் முகமது ரியாஸ் வீடுகள் உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன் பிறகு ரூ.18.36 கோடி வைப்புத்தொகை கொண்ட 242 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

இந்தநிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று சி.எம்.ஆர்.எல். நிறுவனம் சார்பில் நிர்வாக இயக்குனர் சசிதரன், மேலாளர் சந்திரசேகரன், அதிகாரி அஜூ ரேச்சல் குரியன், தலைமை நிதி அதிகாரி சுரேஷ் குமார் ஆகியோர் கேரளம் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என அறிவித்த நாள் முதல் தற்போது வரை உள்ள விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இல்லாத ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது. தங்களது தரப்பு வாதத்தை கேட்கும் வரை அமலாக்கத்துறை விசாரணை நடத்தக்கூடாது. மிக கடுமையான மற்றும் சிக்கலான நிதி மோசடிகளை விசாரிக்கும் எஸ்.எப்.ஐ.ஓ. அமைப்பு விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறை விசாரணை நடத்த தேவையில்லை என்று கூறப்பட்டு உள்ளது. இந்த மேல்முறையீடு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.