தேசிய செய்திகள்

கேரள முன்னாள் முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2024ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பணமோசடி வழக்கை பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம்,

கொச்சி கனிமவள மோசடி வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதல் மந்திரி பினராயி விஜயன் வீடு உள்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

1.72 கோடி வழங்கியதாக குற்றச்சாட்டு

இந்த வழக்கில், கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (CMRL) நிறுவனம், பினராயி விஜயனின் மகள் டி. வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் ரூ.1.72 கோடி சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சிஎம்ஆர்எல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, கேரள உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்த நிலையில், இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2024ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பணமோசடி வழக்கை பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.