திருவனந்தபுரம்,
மகளின் நிறுவனத்துக்கு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக வருகிற 23-ந் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி பினராயி விஜயனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கேரளம் மாநிலம் கொச்சியை சேர்ந்த சி.எம்.ஆர்.எல். (கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல்) என்ற நிறுவனம், முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்திய 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனத்துக்கு எந்தவொரு சேவையும் வழங்காமல் ரூ.2.83 கோடியை பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன், அவரது கணவரும், முன்னாள் மந்திரியுமான முகமது ரியாஸ் ஆகிய 3 பேர் பெயர் அடிபட்டது.
இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை 3 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஐகோர்ட்டில் அனுமதி வாங்க முயற்சித்தது. அதே சமயத்தில் கேரளம் மாநில காங்கிரஸ் அரசு இந்த ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே அமலாக்கத்துறை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் விசாரித்த தனிநீதிபதி பக்ரூதீன், கேரளம் அரசின் புலனாய்வு பிரிவு விசாரணை தேவையில்லை. அமலாக்கத்துறையே ஆதாரங்களுடன் இந்த வழக்கை விசாரித்து உள்ளது.
எனவே குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதும் எப்.ஐ.ஆர்.(முதல் தகவல் அறிக்கையை) தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து பினராயி விஜயன் உள்பட 3 பேரும். ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பினராயி விஜயன் உள்பட 3 பேரின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த பரபரப்புக்கு இடையே இந்த வழக்கு தொடர்பாக வரு கிற 23-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பினராயி விஜயனுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் பினராயி விஜயனும், முன்னாள் மந்திரி முகமது ரியா ஸும் இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஊழல் தடுப்புத் துறை முதல் தகவல் அறிக்கை நடவடிக்கைகளுக்குத் தடை கோரி இந்த மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு பரி சீலிப்பதை பொறுத்து, அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராவது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.