திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா நோக்கி 166 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் அரேபியா விமானம், பறவைகள் மோதியதால் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.நேற்று திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், ஓடுபாதையில் இருந்து மேலெழுந்த சில நிமிடங்களிலேயே பல பறவைகள் அதன் என்ஜின் பகுதியில் மோதின. இதனால் என்ஜின் விசிறி இறக்கைகள் சேதமடைந்ததாக எச்சரிக்கை சமிக்ஞை கிடைத்தது.
இதையடுத்து விமானி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திடம் அவசர தரையிறக்க அனுமதி கோரினார். உடனடியாக பிற விமானங்களின் இயக்க அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டு, ஏர் அரேபியா விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால், அதிலிருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு தங்கும் வசதிக்காக விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேதமடைந்த விமானத்தை ஆய்வு செய்து பழுதுபார்க்க ஷார்ஜாவில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்கள் வர உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பறவைகள் மோதியதும் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதுடன், 166 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உயிர் தப்பினர்.