தேசிய செய்திகள்

என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: ஒடிசா மந்திரியின் மருமகன் கைது; போலீசார் தீவிர விசாரணை

கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் பிபூதி பூஷணின் மருமகனான பிஸ்வஜித் ஜெனாவை போலீசார் கைது செய்தனர்.

பெர்ஹாம்பூர்

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் ஒடிசா மந்திரியின் மருமகனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசாவில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசில் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் பிபூதி பூஷண் ஜெனா. இவருடைய உறவினர் பிஸ்வஜித் ஜெனா (வயது 24). கஞ்சம் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் படித்து வந்த மாணவியுடன் இவருக்கு (வயது 20) தொடர்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சகோதரி மற்றும் 3 பேருடன் விடுதியில் தங்கி, அதே கல்லூரியில் படித்து வந்த அந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி பி.சி.ஏ. படித்து வந்துள்ளார். அவருடைய மாமா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ. ரமேஷ் சந்திரா அய்யாவ் பட்னாயக் கூறும்போது, சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். மந்திரியுடன் தொடர்பு என்றில்லாமல் பாரபட்சமின்றி குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கூறினார்.

போலீசார் தீவிர விசாரணை

கஞ்சம் மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் சரோஜ் சபத், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் என்றார். இந்த விவகாரத்தில் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் பிபூதி பூஷணின் மருமகனான பிஸ்வஜித் ஜெனாவை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.