புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(UPSC) நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் குடிமைப் பணிகளுக்கான தேர்வின் வரலாறு குறித்த வரலாற்று ஆவணங்களின் கண்காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, கண்காட்சியை பார்வையிட்டார். மேலும், யூ.பி.எஸ்.சி.யின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நினைவு நாணயம், தபால் தலை மற்றும் ஒரு புத்தகம் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;-
“இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிட்டபோது, 1920-ல் சுபாஷ் சந்திர போஸ் இந்த தேர்வை எவ்வாறு எதிர்கொண்டார் என்பது பற்றிய தகவல்களும் அதில் இடம்பெற்றிருப்பதை கவனித்தேன்.
அந்த காலத்தில் இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோதிலும், குடிமைப் பணிகளுக்கான தேர்வில் ஒரு சமஸ்கிருத வினாத்தாள் இருந்தது என்பதும், அந்த தாளை சுபாஷ் சந்திர போஸ் எழுதியிருக்கிறார் என்பதும் என் கவனத்தை ஈர்த்தது.
கடந்த நூற்றாண்டில் பலரும் இந்த தேர்வு முறையை ஒரு நம்பிக்கையின் மரபாக மாற்றி, யூ.பி.எஸ்.சி.யை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். இளம் தேர்வர்கள் இந்தியாவின் குடிமைப் பணி அமைப்பின் வரலாற்றுப் பயணத்தை புரிந்துகொள்ள இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.