தேசிய செய்திகள்

எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்: சித்தராமையா

நான் எனது வாக்கை காப்பாற்றிவிட்டேன் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்றனர். அப்போது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பாக பரபரப்பான தகவல் வெளியானது. இதன்படி, இரண்டரை வருட காலம் சித்தராமையாவும், மற்றொரு இரண்டரை வருட காலத்தில் டி.கே. சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவியை வகிப்பார்கள் என தகவல் கசிந்தது.

இதனால், கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்சியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்களும் அதனை ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அதிகார மாற்றம் எதுவும் காணப்படவில்லை.

இந்த சூழலில், துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாருக்கு வழிவிடுவதற்காக முதல்-மந்திரி பதவியை சித்தராமையா இன்று ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் தாவர்சந்த் கெலாட் வெளியூர் சென்றிருக்கும் நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரின் சிறப்புச் செயலாளர் பிரபு சங்கரிடம் சித்தராமையா வழங்கினார்.

ராஜினாமா செய்த பின் சித்தராமையா கூறியதாவது:-

நான் எனது கடிதத்தை கவர்னர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளேன். கவர்னர் தற்போது இங்கு இல்லை. இன்று இரவு அவர் வர இருக்கிறார். எனவே, அவரது அலுவலகத்தில் நான் எனது ராஜினாமா கடிதத்தை அளித்தேன். எனது ராஜினாமாவை கவர்னர்ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஏனெனில், இது அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட நடவடிக்கைதான். சட்டப்பேரவையில் எங்கள் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. எனவே, புதிய சட்டமன்றக் குழு தலைவர் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

எனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் ஏற்கெனவே என்னிடம் கேட்டுக்கொண்டது. காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டதன் பேரில் ராஜினாமா செய்துள்ளேன். எனது ஆட்சி காலத்தில் 300 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். 2 முறை முதல்-மந்திரியாகவும், 2 முறை எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டுள்ளேன். மக்களுக்கு பல்வேறு நல பணிகளை செய்துள்ளேன்.

தற்போது நான் எனது வாக்கை காப்பாற்றிவிட்டேன். கர்நாடகாவுக்கு சேவை செய்ய கட்சி எனக்கு இரண்டு முறை வாய்ப்புகளை வழங்கியது. அதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

"எல்லாம் சமம் என்ற எண்ணம் கொண்டவன் நான். எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் சமநிலை தவறும். அந்த சமமின்மை நீங்க வேண்டும் என்றால் அனைவருக்கும் சம வாய்ப்பு எப்போதும் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சித்தராமையா ராஜினாமா செய்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரியாகிறார் டி.கே.சிவக்குமார்.